சென்னை ஐஐடி வளாகத்தில் திடீர் தீவிபத்து.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் விளம்பர ஆராய்ச்சி மையத்தில் நேற்றிரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் உடனடியாக தேனாம்பேட்டை, கிண்டி, ராஜ்பவன் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் ஐஐடி கல்லூரிக்கு விரைந்தன. ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஐஐடி ஊழியர்களின் முயற்சியால் சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த தீவிபத்தால் விலைமதிப்புள்ள ஆவணங்கள் தீயில் நாசமாகிவிட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது ஒரு ஆறுதல் செய்தி
இந்த தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐஐடி சென்னையின் ஊடக பிரிவான தி ஃபிப்த் எஸ்டேட், தீப்பற்றிய கட்டடத்தில் இருந்து மாணவர்கள் சென்ற 15 நிமிடத்தில் தீ பற்றியுள்ளதால் மாணவர்கள் ஆபத்தின்றி பிழைத்தனர் என்றும், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தீ விபத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.