ஐதராபாத்தில் உள்ள. முஷீரபாட் என்ற இடத்தில் இன்று அதிகாலை மரக்கிடங்கு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முஷீரபாட் நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரக்கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த மரக்கிடங்கு அருகே குடியிருப்புப் பகுதிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் பல இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆறு தீயணைப்புப் படை வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஏறத்தாழ ஆறுமணிநேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீவிபத்தில் மரக்கிடங்கில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாயின.
முன்னதாக போலீஸாரும், தீயணைப்புத்துறையினர்களும், குடியிருப்பு பகுதிகளில் இருந்த பொதுமக்களை உடனே வெளியேற்றினர். மரக்கிடங்கில் இருந்த மின்சார இணைப்பில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீவிபத்து நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இந்த இடத்தில் பாதுகாப்பில்லாத மரக்கிடங்கு இருப்பது குறித்து பலமுறை புகார் செய்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.