திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென தீப்பிடித்ததால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் மின்சார கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி மருத்துவமனையின் மற்ற பிரிவுகளுக்கும் வேகமாக பரவியதால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
நடக்க முடியாமல் நிலைமையில் இருந்த நோயாளிகள், மற்றும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலிகள் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.