பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் அருகே கைலாசகிரி என்ற புனிதத்தன்மை வாய்ந்த மலை 14 கிலோ மீட்டர் நீளத்தில் 5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மலையில் ஏராளமான அரிய வகை மரங்கள், மற்றும் தீர்க்க முடியாத நோய்களை எளிதில் குணமாக்கும் அற்புதமான மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த மலையின் துப்பான் நகர் என்ற பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் மற்றும் காற்று காரணமாக தீ மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பெரிய அளவில் பரவியுள்ளதால் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும், ஒரு பக்கம் தீயை அணைத்தால் மற்றொரு புறம் தீ பரவி வருவதால் தீயை அணைக்க மேலும் சில வீரர்கள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடர்ந்த வனப்பதியில் தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இன்று 2வது நாளாக தீபற்றி எரிகிறது. தீயை அணைக்க இன்னும் 3 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள கொண்டாமிட்டா, கைலாசகிரிநகர், துப்பான் நகர் ஆகிய பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினார்கள். காட்டு தீ பரத்வாஜ் தீர்த்தத்தில் உள்ள கோசாலை வரை நெருங்கியது. இதனால் கோசாலையில் இருந்த 450 பக்தர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அங்குள்ள வைக்கோல் போரில் தீப் பிடிக்காமல் இருக்க வீரர்கள் தண்ணீர் தெளித்து வருகிறார்கள். இந்த விபத்தால் 50 ஆயிரம் மூலிகை செடிகள் கருகி நாசமானதாக செய்திகள் கிடைத்துள்ளது.