தெலுங்கானா முதல்வர் நடத்திய யாகத்தில் தீவிபத்து.
உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டில் நடைபெற்ற மகா சண்டி யாகம் என்ற யாகத்தின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தால் யாருக்கும் காயம் இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி.
ஐதராபாத் அருகேயுள்ள மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகா சண்டி யாகம் சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த யாகத்தில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் தினமும் கலந்து கொள்கிறார். மேலும் இந்த யாகத்தில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், யாகத்தின் இறுதி நாளான நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாகம் நடைபெறும் பந்தலின் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஒமகுண்டத்திலிருந்து பரவிய தீ, யாகம் நடைபெற்ற பந்தலுக்குப் பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அங்கிருந்த பூசாரிகளும், பொதுமக்களும் அவசர அவசரமாக வெளியேறினர். தகவல் அறிந்து உடனடியாக 3 தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த யாகத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தீ விபத்து காரணமாக அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.
Chennai Today news: Fire breaks out at chandra sekara rao’s yaga in Telungana