மேற்கு வங்காள மாநிலத்தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று காலை 10.20 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் முதலில் தீ பிடித்ததாகவும், பின்னர் அந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக தீயணைப்பு துறையினர் 20 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரதான தலைமைச் செயலகமான ரைட்டர்ஸ் கட்டிடத்தின் விரிவாக்கமாக இது கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்திற்கு காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை எனினும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.