உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் பல முக்கியமான ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வந்த மதுரா நகர் தீயணைப்பு படையினர் 3 மணிநேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
இந்த தீ விபத்து குறித்து இஸ்கான் கோயிலின் செயலாளர் மாதவ் இந்து கூறும்போது, நேற்று இரவு பூஜைகள் நடந்து கொண்டிருந்தபோது ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொள்வதற்காக கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். அந்தநேரத்தில் கோவிலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி, பொது மேலாளர் அலுவலகம், சேமிப்பு அறை மற்றும் அருகிலுள்ள அறைகளுக்கும் சென்றது.
இதனால் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல ஆவணங்கள் மற்றும் பொருட்கள் தீயினால் அழிந்து விட்டன என தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை என்றாலும் மின்சார கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.