திருப்பதி திருமலையில் பாபவிநாசம் பகுதியில் இருந்து தும்புரு தீர்த்தம் பகுதி வரை, கடந்த 4 நாள்களாக பயங்கரமாக பரவி வந்த காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் வந்தது. ஆனாலும் அங்குள்ள, வனப்பகுதியில், சுமார் 460 ஹெக்டர் பரப்பவுள்ள விலைமதிப்புள்ள அபூர்வ மூலிகை செடிகள், மரங்கள் ஆகியவை தீக்கீரையானதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு கூறியுள்ளார்.
திருமலையில் கடந்தசில ஆண்டுகளாக அடிக்கடி தீ விபத்து நடப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட, இதுபோன்ற ஒரு தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கியதாகவும் கூறிய தேவஸ்தான அறங்காவலர் இனி இதை நிரந்தரமாக தடுக்க, சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
மேலும், வனத்துறையினர் சார்பில், வனத்துக்குள் வெளி வட்ட பாதைகளும், நீள் பாதைகளும் அமைத்தால் இது போன்ற சமயங்களில் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர, 4 ஹெலிகாப்டர்களில் திருமலையில் உள்ள குமாரதாரா, பசுப்புதாரா நீர் தேக்கங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 25 பேர்கள், அரக்கோணம் மற்றும் விசாகபட்டினத்திலிருந்து, 40 கடற்படை அதிகாரிகள் ஆகியோர்களின் உதவியால் நேற்று மதியம், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.