நாய் கடித்தாலோ, காயம் ஏற்படுத்தினாலோ செய்ய வேண்டிய முதலுதவி மிக முக்கியமானது. சிறிய காயம் என்றாலும் அந்த இடத்தில் நிறைய தண்ணீரைவிட்டு கழுவவேண்டும். பின்பு காயத்தில் இருக்கும் ரத்தத்தையும், நீரையும் ஒத்தடம் கொடுத்ததுபோன்று ஒற்றி எடுக்கவேண்டும். அதன் மேல் ‘ஆன்டிசெப்டிக் கிரீம்’ பூசலாம்.
ஆழமான காயம் என்றால் சுத்தமான துணியால் லேசாக அழுத்தி, ரத்தம் வெளியேறுவதை தடுக்கவேண்டும். அவசரப்பட்டு காயத்தை பெரிதாக்கிவிட்டால் ரத்தப்போக்கு அதிகரித்து விடும். ரத்தப்போக்கு நின்ற பிறகு காயத்தை கழுவி சுத்தப்படுத்தவேண்டும். காயத்தை நன்றாக கழுவுவது, பாக்டீரியாக்களை வெளியேற்றும். காயம் அடைபட்ட நிலையில் இருந்தால் அதில் கிருமிகள் பெருகி கிருமித்தொற்று ஏற்பட்டுவிடும். அதனால் காயத்தை துணியால் கட்டக்கூடாது. முதல் உதவி செய்த பின்பு அதற்குரிய டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
கடித்தது முறைப்படி எதிர்ப்பு சக்தி ஊசிகள் போடப்படாத வளர்ப்பு நாயாக இருந்தாலும், தெருநாயாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர் விஷ முறிவுக்கான ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டது குழந்தை என்றால், ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது அதுவரை அந்த குழந்தைக்கு போடப்பட்டிருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் பற்றிய விவரத்தை எடுத்துச்செல்லவேண்டும். ஐந்து வருடத்திற்குள் டெட்டனஸ் வாக்சின் போடப்பட்டிருந்தால், மீண்டும் போடவேண்டியதில்லை.
கடிபட்ட குழந்தைக்கு டாக்டர் வழங்கும் மருந்துகளையும், ஆண்டிபயாடிக்குகளையும் தவறாமல் கொடுத்துவரவேண்டும். காய்ச்சலோ, காயம் ஆறாமலோ இருந்தால் டாக்டரிடம் மீண்டும் காட்டவேண்டும். எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அத்துடன் விளையாட அனுமதிக்காதீர்கள்.
நாய் அமைதியானதாக இருந்தாலும் அது தூங்கும்போதோ, உணவருந்தும்போதோ அதை தொந்தரவுபடுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள். வளர்ப்பு நாயிடம் இயல்புக்கு மாறான மாற்றங்கள் தெரிந்தால், அதுபற்றி கால்நடை டாக்டரிடம் கலந்தாலோசியுங்கள்.
வளர்ப்பு நாய்களுக்கு எல்லாவிதமான தடுப்பூசிகளையும் அந்தந்த காலகட்டத்தில் போட்டுவிடுங்கள்.