2023-ல் இந்தியாவில் புல்லட் ரயில் ஓடுவது உறுதி. மத்திய அமைச்சர் தகவல்

2023-ல் இந்தியாவில் புல்லட் ரயில் ஓடுவது உறுதி. மத்திய அமைச்சர் தகவல்

bulletஇந்தியாவில் வரும் 2023ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில் உறுதியாக ஓடும் என்றும் இந்திய துணைக்கண்டத்தில் இது ரயில்வே துறையில் புதிய சகாப்தமாக இருக்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் 2023-ம் ஆண்டு இந்தியாவில் முதல் புல்லட் ரயில் ஓடும். இத்திட்டத்தின் பல்வேறு படிநிலைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்து விட்டோம். மும்பை-அஹ்மதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரங்களில் இது கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ. எனினும், மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன. இதர பெருநகரங்களை இத்திட்டத்தில் இணைப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது’ என்று கூறினார்.

மும்பை-அஹ்மதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவையில், 21 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கு அடியில் சுரங்கப் பயணமாக இருக்கும். இந்த அனுபவத்தை பயணிகள் பெற உள்ளனர். இத்திட்டத்தின் மொத்த மதிப்பான 97 ஆயிரத்து 636 கோடி ரூபாயில், 81 சதவீதத்தை ஜப்பான் கடனாக அளிக்க உள்ளது. இம்மதிப்பீட்டில், திட்ட செலவு உயர்வு, கட்டுமான காலத்திற்கான வட்டி, இறக்குமதி வரி உள்ளிட்டவையும அடங்கும். ஜப்பான் அளிக்கும் கடன் 50 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 0.1 சதவீத வட்டியைக் கொண்டது. 15 ஆண்டுக்கு கடன் தவணையைக் காலம் தாழ்த்திச் செலுத்தலாம்.

ஜப்பான் நிறுவனம் ஜேஐசிஏ அளித்துள்ள திட்ட கருத்துருவின்படி, பெரும்பாலான பாதை உயர் பாலத்தில் அமைக்கப்பட உள்ளது. சிக்னல், மின் சாதனங்கள் உள்ளிட்டவையும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. கட்டுமானப் பணி வரும் 2018 இறுதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply