பிரதமரின் பாகிஸ்தான் பயணத்துக்கு கிடைத்த ‘பதில்’தான் பஞ்சாப் தாக்குதல்: ஒமர் அப்துல்லா
சமீபத்தில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் மோடி, திடீர் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்று அந்நாட்டு பிரதமரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த சந்திப்பு மோடியின் ராஜதந்திரத்தை காட்டுவதாக பாஜகவினர் பெருமையாக பேசி வந்தனர்.
இந்நிலையில் பிரதமரின் பாகிஸ்தான் பயணம் முடிந்து ஒருசில நாட்களே ஆகியுள்ள நிலையில் பஞ்சாப் விமானப்படை தளத்தில் பாகிஸ்த்ஹான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான ‘திடீர்’ பாகிஸ்தான் பயணத்தின் மூலம் அவருக்கு கிடைத்த சவால்தான் இந்த தாக்குதல் என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன், விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே தீவிரவாதிகள் ஊடுருவி இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான ‘திடீர்’ பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில் தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவாலே இந்தத் தாக்குதல்.
தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்க முடியாது. அதில் பலனும் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை அவமதிக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது” என்று ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
Chennai Today News : First Challenge To PM’s Pakistan Gambit’: Omar Abdullah After Punjab Attack