இந்தியாவின் தொழில்நுட்பத்தால் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா என்ற ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஏவுகணை விமானத்தில் இருந்து விண்ணில் சென்று இலக்கை தாக்கும் அதிநவீன ஏவுகணை ஆகும்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “அஸ்திரா’ ஏவுகணையை, நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள கடற்படை விமான தளத்தில் Sukhoi-30MKI போர் விமானத்தில் இருந்து விமானப்படை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவியது’ என்று தெரிவித்துள்ளது. இது இந்தியா உருவாக்கியுள்ள முதல் பி.வி.ஆர். ரக ஏவுகணையாகும். அனைத்து தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் செலுத்தக் கூடியது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த விஞ்ஞானிகளுக்கு டிஆர்டிஓ தலைவர் அவினாஷ் சந்தார் வாழ்த்து தெரிவித்தார். தற்போது பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணை மிகவிரைவில் உண்மையான இலக்கை தாக்கும் பரிசோதனையை மேற்கொள்ளப்படும் என்று அவினாஷ் தெரிவித்தார்.