முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது. முதல்முறை எம்.எல்.ஏக்களுகு ராஜஸ்தான் முதல்வர் அறிவுரை
முதல்முறையாக எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முதல் அமைச்சருக்கு பதவிக்கு ஆசைப்படக்கூடாது. எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக மாறி நல்ல அனுபவம் பெற்ற பின்னரே முதல் அமைச்சர் பதவி குறித்து நினைத்து பார்க்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்து உள்ளார்.
தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்தாய்வு கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”முதல்முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எடுத்த எடுப்பிலேயே அமைச்சராகி, சிவப்பு விளக்குடன் காரில் ஒய்யாரமாக பவனி வர வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது.
ஓட்டு போட்டு உங்களை தேர்வு செய்த மக்களுக்காக உங்கள் தொகுதிக்குள் வளர்ச்சி பணிகளை மேம்படுத்துவதில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். இதன்மூலம் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெறும் அளவுக்கு மக்களிடம் இருந்து நன்மதிப்பை சம்பாதிக்க வேண்டும்.
அதிகாரிகளை மாற்றம் செய்ய சிபாரிசு செய்வது போன்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு, பதவியில் இருக்கும் அதிகாரிகளுடன் நட்புணர்வுடன் பழகி உங்களது தொகுதிக்குட்பட்ட மேம்பாடு மற்றும் இதர நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய பாடுபட வேண்டும். கட்சி தொண்டர்களுடன் நெருக்கமாக பழகி, நமது அரசின் சாதனைகளை அவர்களுக்கு விளக்கி கூறி, பொதுமக்களுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்”
இவ்வாறு வசுந்தரராஜே கூறியுள்ளார்.