முதல் பொதுநிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த சசிகலா
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பிரபலமாக தற்போது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தொடங்கிவிட்டார். இதன்படி இன்று அவர் இந்தியா டுடே நடத்தும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தார். சசிகலா கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் திரையில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது உணர்ச்சிமிகுதியால் சசிகலா கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ‘நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் முதலீடு செய்வதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொழில்துறையில் அதிக வேலை வாய்ப்பை தரும் மாநிலமாக, தமிழகம் மாறி வருகிறது. தமிழகம் தொழில்புரிய ஏற்ற மாநிலமாக இருப்பதாக, உலக வங்கியே பாராட்டியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது, ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முன்னேறி வருகிறது’ என்று கூறினார்.
மேலும் இந்த மாநாடு நாளையும் நடைபெறவுள்ளதாகவும், நாளை ஐந்து மாநில முதல்வர்கள் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.