இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட மீனவர் உடல் இன்று அடக்கம்
இலங்கை மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் வரை இலங்கை கடற்படையினரால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்று கடந்த ஆறு நாட்களாக பிரிட்ஜோவின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் குடும்பத்தினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர் பிரதிநிதிகளிடமும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மீனவர் பிரிட்ஜோவின் உடலை இன்று பெற்றுக்கொள்வதாகவும், இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் மீனவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் போராட்ட பந்தலில் பலியான பிரிட்ஜோவுக்காக இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என்றும் இந்த கூட்டம் முடிந்த பின் மீனவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் பிரிட்ஜோ தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.