நாகப்பட்டினம்: தமிழ்நாடு மீன்வள பல்கலையில், மீன்வளம் சார்ந்த பொறியியல் படிப்பு, இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிப்பில் சேர, மே 18 முதல், ஆன் -லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
நாகப்பட்டினத்தில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலை உள்ளது. இந்த பல்கலையின் கீழ், தூத்துக்குடியிலும், பொன்னேரியிலும், மீன்வளக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பி.எப்.எஸ்சி., எனப்படும், இளநிலை மீன்வள அறிவியல் படிப்புக்கு, தூத்துக்குடியில், 40 இடங்களும், பொன்னேரியில், 20 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு, மீன்வள பொறியியல் படிப்பான பி.இ., அறிமுகப்படுத்தப்படுகிறது. நாகப்பட்டினத்தில், இதற்காக, 20 இடங்களுடன் பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன் -லைன் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். இன்று காலை, 10:00 மணி முதல், www.tnfu.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.
ஜூன் 17ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை, பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 04365 – 240558 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை அறிவித்துள்ளது.