26 ஆண்டுகால கனடா வரலாற்றில் முதல்முறையாக பள்ளியில் துப்பாக்கி சூடு. 5 பேர் பலி
கனடா நாட்டில் உள்ள சஸ்கட்சேவன் என்ற மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றினுள் புகுந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் 5 பேர் பரிதாபமாக பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள லா லோச்சே என்ற பகுதியில் 7ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நேற்று மாலை திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் குண்டடி பட்டு பலியாகினர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26 ஆண்டுகால கனடா நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போது நடந்துள்ள இந்த கொடூர தாக்குதல் குறித்து உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய மர்மநபரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக அருகாமையில் இருக்கும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.