தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஐந்து மீனவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் வழிமேல் விழி வைத்து தங்கள் தந்தையின் முகத்தினை பார்க்க திருச்சிக்கு வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் அவர்கள் தங்கள் தந்தையின் வருகையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..
போதை மருந்து கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற ஐந்து தமிழக மீனவர்கள் மோடி அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக ராஜபக்சேவின் உத்தரவால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இன்று அவர்கள் விமானம் மூலம் திருச்சி விமானம் வரவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதையடுத்து, திருச்சி வரும் ஐந்து மீனவர்களை வரவேற்க மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் கணவர் மற்றும் மகன்களின் குரலை மட்டுமே கேட்டு வந்த மீனவர்களின் மனைவியரும் அவர்களது பெற்றோரும் அவர்களை நேரில் காண ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.
இதில் மீனவர்கள் எமர்சன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவருக்கும், அவர்கள் சிறைக்கு சென்ற சில மாதங்களுக்கு பின்னர் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால், பிறந்தது முதல் தங்கள் தந்தையின் முகத்தை அந்த இரு குழந்தைகளும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரளவு விவரம் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ள அந்த குழந்தைகளுக்கு அவர்கள் தந்தையின் முகங்களை போட்டோக்களின் மூலமே தெரிந்து கொண்டனர்.
இந்நிலையில், மீனவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி அந்த குழந்தைகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும், தங்கள் தந்தையை முதன் முறையாக நேரில் சந்திக்க ஆவலுடன் நேற்று இரவு முழுவதும் தூங்கா விழிகளுடன் காத்திருந்தனர். வாலேஸ் மற்றும் ஜெயேஸ் ஆகிய அந்த இரு குழந்தைகளுடன் மற்ற குழந்தகளும் இன்று அதிகாலை 3 மணிக்கு திருச்சிக்கு வரும் தங்கள் தந்தையின் முகம் காண உறவினர்களுடன் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்.