சீனா: முதல் சேவையிலேயே பாலத்தில் மோதிய பயணிகள் விமானம். 5 பேர் பலி
சீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமான சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே அந்த விமானம் விபத்துக்குள்ளாகி 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீன மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீரிலும் வானத்திலும் செல்லும் வகையில் சீன விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்பிபியன் விமானத்தின் சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்ததால், முதல் விமான சேவையை கிழக்கு சீனாவில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, முதல் ஆம்பிபியன் விமானம் ஷாங்காயின் ஜின்ஷான் மாவட்டத்தில் இருந்து ஜெஜியாங் மாகாணம் ஜோஷான் நகருக்கு நேற்று 10 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் சிறிது நேரத்தில் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோதி நொறுங்கியதால் விமான நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் முன்பகுதி பாலத்திலும், பின்பகுதி தண்ணீருக்குள்ளும் இருந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து காயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.