புல்லாங்குழல் வழியே சென்ற இறுதிமூச்சு. கச்சேரியின் போது மரணம் அடைந்த புல்லாங்குழல் கலைஞர்

புல்லாங்குழல் வழியே சென்ற இறுதிமூச்சு. கச்சேரியின் போது மரணம் அடைந்த புல்லாங்குழல் கலைஞர்
flutarist
பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஏ.வி.பிரகாஷ் கச்சேரி ஒன்றில் புல்லாங்குழல் வாசித்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறுதி மூச்சு அவர் உயிருக்கும் மேலாக நேசித்து வந்த புல்லாங்குழல் வழியாகவே சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்.ரமணியின் சீடரும் பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞருமான 74 வயது ஏ.வி. பிரகாஷ் நேற்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கச்சேரியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், சிறு வயதில் பிரபல புல்லாங்குழல் இசைமேதை என்.ரமணியிடம் முறையாக புல்லாங்குழல் பயின்றவர். மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு புல்லாங்குழல் இசைக்க கற்றுத் தந்துகொண்டிருந்தார்.

74 வயதிலும் பல இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர் நேற்று மைசூரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் வயலின் இசைக்கலைஞர் நரசிம்ம மூர்த்தியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உயிர் பிரியும் கடைசி நேரத்திலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துமாறு சகக்கலைஞர் நரசிம்ம மூர்த்தியிடம் அவர் கேட்டு கொண்டது அனைவரின் மனதையும் கரைய வைத்தது.

Leave a Reply