விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சித்தர்கள் வாழும் சதுரகிரி மலையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பக்தர்கள் பெருமளவில் கூடி அங்கு அமைந்துள்ள சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலையில் குவிந்தனர்.
நேற்று ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று குளித்து விட்டு நீரோடை வழியாக மலையில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக சிறு ஓடைகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் காட்டாற்று வெள்ளமாக மாறியது. இதனால் நீரோடைப் பகுதியில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதில், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், பொன்ராஜ் உள்பட 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேரின் உடல்களை மீட்புப் பணியில் மீட்டனர்.
காட்டாற்று வெள்ளம் குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல், தீயணைப்பு, வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் ஆயிரம் பேர்களை பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர், அவர்களை கோயில் வளாகத்தில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினர். . இன்று காலையும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது.