கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட தமிழக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது தண்ணீர் போதும் போதும் என்ற அளவுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து நேற்று 40,000 கனஅடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று ஒகேனக்கல் வந்தடையும் என தெரிகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதன் கரையோரத்தில் மற்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவில், முதலைப்பண்ணை, நெருப்பூர், நாகமரை போன்ற பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் இன்று முதல் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது.