சட்டப்பேரவையில் அமளி: ரகசிய வாக்கெடுப்பு நடத்த தி.மு.க, ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
சட்டப்பேரவையில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார்.
தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, தி.மு.க, பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முழக்கமிட்டனர்.
மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.