சென்னை போன்ற பெருநகரம் தொடங்கி, தமிழகத்தின் உட்கிராமங்கள் வரை மர்மக் காய்ச்சல் என்கிற பெயர் தெரியாத காய்ச்சலும், பன்றிக் காய்ச்சல் என்ற பெயர் வைக்கப்பட்ட காய்ச்சலும் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. தமிழகம் முழுக்க காய்ச்சல் காரணமாக பலர் உயிர் இழந்திருப்பது பதிவாகியுள்ளது. சிலர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், காய்ச்சல்களில் இருந்து தப்பிக்கும் வழிகள், எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர், டாக்டர் ராஜேந்திரன்.
”இந்த மாதங்களில் பலவித காய்ச்சல்கள் வருவது வாடிக்கையே. அதிலும் அதிகமான பனிப்பொழிவு, தொடரும் குளிர் என்று இந்த வருடம் கூடுதலாகவே வாட்டுகிறது. இந்த மாற்றத்தால் வைரஸ் கிருமிகள் அதிகளவில் பரிமாணம் அடையக்கூடும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் வைரஸ் கிருமிகள் தாக்கலாம்.
சத்தான உணவுகளைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்வது, சுற்றுப்புற தூய்மையை காப்பது, பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் என்றாலும்கூட கொதிக்க வைத்தே குடிப்பது, ஐஸ்கிரீம் போன்ற சூழலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது, முறையான உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, வீட்டு விலங்குகளிடமிருந்து தள்ளியே இருப்பது… இவை எல்லாம் காய்ச்சலைத் தவிர்க்கும் வழிகள்!
அதிக காய்ச்சல், மூட்டுவலி, பசியின்மை, கண் எரிச்சல், வாந்தி, சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமருத்துவத்தில் இறங்குவது, நோயின் வீரியத்தை முற்றிவிடச் செய்யும். சில வைரஸ் கிருமி தாக்குதலால் ரத்த அணுக்கள் வெகுவாக பாதிப்படையும். அது உயிருக்கே ஆபத்தாகும். சுயமாக மெடிக்கல் ஷாப்களில் மாத்திரை வாங்கிச் சாப்பிடும் அஜாக்கிரதைக்கு, உயிரை விலையாகக் கொடுக்காதீர்கள். தொடர் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அவசியம். மேலும், நோய்க்கிருமியின் தாக்கத்தை முழுமையாக அழிக்க, டாக்டர் பரிந்துரைக்கும் நாட்கள் வரை தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் தேறியதுபோல் தெரிந்ததும் நிறுத்திவிட வேண்டாம்” என்ற டாக்டர் ராஜேந்திரன்,
“மொத்தத்தில், சுற்றுப்புறத் தூய்மை, நோய் வந்தால் உடனடி மருத்துவம்… இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!” என்று அக்கறையுடன் சொன்னார்.