சன் குழுமம் ஏலத்தில் பங்கு பெறுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு. மத்திய அரசு முடிவு
பண்பலை சேவை ஒலிபரப்பாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஏலத்தில் சன் டிவி குழுமம் பங்கேற்க சென்னை மற்றும் டில்லி உயர் நீதிமன்றங்கள் அளித்த அனுமதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, சென்னை பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை நிர்வாகிகளாகக் கொண்ட சன் டிவி குழுமத்தின் பண்பலை வானொலிகள் (எஃப்.எம்) மூன்றாம் கட்ட ஏலத்தில் பங்கேற்க பாதுகாப்பு அனுமதி வழங்க முடியாது என்று மத்திய உள்துறை மறுத்தது.
மேலும் இந்த நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான வழக்குகள் “பொருளாதார குற்றம்’ தொடர்புடையவை என்பதால் அவற்றின் விசாரணை நிலுவையில் இருப்பதால், இந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் மத்திய உள்துறை கூறியது.
இந்நிலையில், பண்பலை வானொலி சேவைக்கான ஏலம் கடந்த ஜூலை 27-ஆம் தேதி டில்லியில் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சன் டிவி குழும நிறுவனங்களுக்கு சென்னை, டில்லி உயர் நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன. எனினும், இந்த ஏலத்தின் முடிவை மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து சன் டிவி குழுமத்தின் “ரெட் எஃப்எம்’ டில்லியில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றது. இதேபோல சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அக்குழுமத்தின் மற்ற பண்பலை வானொலி சேவை வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன. இந்நிலையில், உயர் நீதிமன்றங்களின் உத்தரவால், ஏல முடிவுகளை வெளியிட முடியாத நிலை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. எஃப்எம் சேவை தொடங்க விண்ணப்பித்திருந்த மற்ற பண்பலை வானொலி சேவை நிறுவனங்களும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், சென்னை, டில்லி உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “சன் டிவி குழும நிறுவனங்களின் வழக்கால் பண்பலை வானொலி சேவையின் மூன்றாம் கட்ட விரிவாக்கம் தடைபட்டுள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் சுப்ரீம் கோர்ட்டை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றார்.