சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கிக்கு ஃபேஸ்புக்கில் அமோக ஆதரவு
ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் சென்னை நகரில் பட்டினியால் வாழும் தெருவோர மனிதர்களின் துயரை துடைக்க சென்னை பெண் எடுத்துள்ள புதிய முயற்சி ஒன்றுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ஆகியவை மூலம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. கருணயுள்ளம் கொண்ட சினேகா மோகன்தாஸ் என்ற இளம்பெண்ணின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
23 வயது சினேகா என்ற விஸ்யுவல் கம்யூனிகேசன் பட்டதாரி பெண்ணின் சமூக அக்கறை மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்டதுதான் இந்த உணவு வங்கி. இந்த வங்கியில் தற்போது சினேகாவுடன் பலர் இணைந்து ஏழை எளியவர்களின் பசியை போக்கி வருகின்றனர். இதுகுறித்து சினேகா கூறியதாவது: ‘இன்றும் பல பேர் 3 வேளை உணவுக்கு வழியின்றி துன்பப்பட்டு வருகிறார்கள். சென்னையிலும் அது எளிதாக காணக்கிடைக்க கூடிய காட்சியாகத்தான் இருக்கிறது. இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இதை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் ‘உணவு வங்கி’. இதன் செயல் திட்டம் மிக எளிமையானது. இந்த வங்கி, குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்களது வீடுகளில் இருப்போருக்கு சமைக்கையில் கொஞ்சம் கூடுதலாக சமைத்துவிடவேண்டும். பின்னர் என்னை ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் போதும். உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பாக்கெட் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்” என்று கூறினார்.
தியாகராய நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 55 பாக்கெட் உணவுகள் சினேகாவின் உணவு வங்கி மூலம் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. இவரின் இந்த முயற்சிக்கு சினேகாவின் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஊக்கம் அளித்து உதவி வருகின்றனர். வங்கி ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே ஃபேஸ்புக் மூலம் 2895 நண்பர்கள் உணவு வங்கியில் இணைந்துள்ளனர்.
“சென்னையில் தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், அசோக் நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உணவு வங்கியின் ஆர்வலர்கள் தங்களின் உணவு சேவையை வழங்கி வருகிறார்கள். தற்போது சென்னை முழுக்க நாள் ஒன்றுக்கு 1200 உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் சாலைகளில் வசிப்போர் யாரும் 3 வேளை உணவின்றி வாடும் நிலை இல்லாமல், உணவுண்டு வயிறு நிறைந்து, பட்டினியை வென்ற மனிதர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்கிறார் சினேகா மோகன்தாஸ்.
சினேகாவின் நல்ல முயற்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புபவர்கள் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளவும். சினேகாவின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு https://www.facebook.com/groups/1628237724087693/?__mref=message_bubble என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்