பலகாரங்களால் வயிற்றை அடைக்கலாமா?

snacks_2612947f

பழைய காலத்தில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்குத் தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி கடையில் முட்டும் அளவுக்குக் கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடில்லாமல் பெருகிவிட்டது.

எப்படி உண்பது?

தீபாவளி அன்றைக்கு மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் ஏன் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம், மாத்ராதீசியம் என்று பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான் மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவைப் பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது; ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது; அகாலத்தில் உண்ணக் கூடாது என்பதே அதன் முக்கிய அம்சங்கள்.

உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியாகிய அக்னியின் பலத்தைப் பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலைக் கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்குத் தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.

அக்னியின் பலத்தைப் பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்கக் கடினமான கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும். லகுவான உணவுப் பொருட்களைச் சற்றுக் கூடுதலாகச் சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.

என்ன பிரச்சினை?

உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும் பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். தீபாவளி போன்ற நாட்களில் சுவை காரணமாகப் பலரும் இனிப்பு, காரம், பலகார வகைகளை அதிகம் உண்பதால், வாத, பித்த, கபம் அதிகமாகி உடல் செரிமானப் பக்குவத்தை இழக்கிறது. இதனால் அஜீரண நோய்கள், வாந்திபேதி, வயிற்று வலி போன்றவை வருகின்றன.

உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவதுபோன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், தலைவலி, விடாய், கழிச்சல், தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

இவ்வாறு தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும், இதை `ஆமவிஷம்’ என்பார்கள். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். லகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தச் செமிக்காத ஆம தோஷம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவத் தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

அஜீரணத்திற்கு ஆமமும், கபமுமே காரணம். சில நேரங்களில் மலச்சிக்கல், சூலை, வயிற்றுப் பொருமல் அதிகமாகக் காணப்படும். இதற்கு விஷ்டத்தம் என்று பெயர். இதை gas abdomen என்றும் சொல்லுவோம். சில நேரங்களில் புளித்த ஏப்பம் அதிகமாகக் காணப்படும். இதை விதக்தம் என்று சொல்லுவோம்.

என்ன செய்யக்கூடாது?

வறட்சியான, சீதளமான, அசுத்தமான உணவும் ஜீரணமாவதில்லை. மனத் துயரம், கோபம் போன்றவற்றாலும் உணவு ஜீரணமாவதில்லை. பத்தியமான உணவுடன் அபத்தியமான உணவைச் சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஸமஸனம் என்று பெயர். உணவு உண்டவுடன் மறுபடியும் சாப்பிடுவதற்கு அத்யஸனம் என்று பெயர். அகாலத்தில் அதிக அளவில் அல்லது குறைந்த அளவில் உணவு உட்கொள்வதற்கு விஷமாசனம் என்று பெயர்.

எப்போதும் உடலுக்குப் பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல், சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும். உணவு சற்றுத் திரவமாக இருக்க வேண்டும். அதிகமாகத் தயிர், சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரைப் பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம். பலாப்பழம், மாம்பழம், மோதகம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.

என்ன செய்யலாம்?

சாலி அரிசி (அறுபதாம் குறுவை அரிசி), கோதுமை, இளம் முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், சிறுபயறு, நாட்டுச் சர்க்கரை, நெய், மாதுளை, பால், தேன், இந்துப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து உண்ணலாம்.

இனிப்புள்ள உணவை முதலில் உண்ண வேண்டும், புளிப்பு, உப்பு நடுவில் வர வேண்டும், துவர்ப்பு கடைசியில் வர வேண்டும். இரைப்பையின் பாதி பாகத்தைத் திட உணவாலும், கால் பாகத்தைத் திரவ உணவாலும் நிரப்ப வேண்டும். எஞ்சியுள்ள கால் பாகத்தை வாயுவின் சஞ்சாரத்துக்கு விட்டுவிட வேண்டும்.

`ஐப்பசியில் அடை மழை’ என்பார்கள். தீபாவளி வரும் காலம் மழை பெய்கின்ற மாதம். சூரியக் கதிரை அதிகமாகக் காணமுடியாதக் காலம். மழை, வாதத்தை அதிகரித்து மூன்று தோஷங்களையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அதற்கேற்பவே உண்ண வேண்டும்.

தீபாவளி லேகியம்

அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வெறும் வயிற்றில் மாவுப் பண்டங்களைச் சாப்பிடுவது, இனிப்பு, எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுவது நம்மூரில் வழக்கமல்ல. ஆண்டு முழுவதும் இது போன்ற உணவு தவிர்க்கப்பட்டே வந்தது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் சற்று அதிகமாக இனிப்பு, எண்ணெய் பலகாரங்களைச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. அப்படிச் சாப்பிடும்போது ‘அக்னி மாந்த்யம்’ ஏற்படாமல், உணவு செரிமானம் அடையப் பயன்படுத்தப்பட்டதே டிசய்யஜம் லேகியம். இதுவே தீபாவளி லேகியம் எனப் பெயர் மாறி, நீண்டகாலமாகப் பழக்கத்தில் இருந்துவருகிறது.

ஜீரக வில்வாதி லேகியம், ஆர்த்ரக ரசாயனம் என்ற இஞ்சி லேகியம், சௌபாக்ய சுண்டி, வில்வாதி லேகியம் போன்ற லேகியங்களையும் தீபாவளியின்போது பயன்படுத்தலாம். ஐப்பசி மாதத்தில் மழை அதிகமாக இருப்பதால் மந்தம் ஏற்படும். அதற்கு உஷ்ண வீர்யமான மருந்தைக் கொடுப்பது வழக்கம்.

தீபாவளி லேகியத்தை வீட்டிலேயே எளிமையாகச் செய்யலாம்:

தேவையான பொருட்கள்

வெல்லம்- 350 கிராம்

திப்பிலி – 50 கிராம்

ஓமம்- 50 கிராம்

கண்டங்கத்தரி – 50 கிராம்

நெய்- 50 கிராம்

சுக்கு- 25 கிராம்

மிளகு – 25 கிராம்

சீரகம் – 25 கிராம்

கொத்தமல்லி – 25 கிராம்

ஏல அரிசி – 5 கிராம்

ஜாதிக்காய் – 5 கிராம்

தேன்- 2 மேசை கரண்டி

ஜாதிக்காய், ஏல அரிசி தவிர்த்த மற்ற அனைத்தையும் லேசாக வறுத்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை நீரில் கரைத்துப் பாகாக்கி, நெய் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாகுக் கம்பி பதம் வரும்போது இறக்கி வைத்து, சூரணத்தைக் கலந்து நன்கு கிளற வேண்டும். அத்துடன் ஜாதிக்காய், ஏலரிசி பொடியைத் தூவி மீண்டும் கிளறவும். ஆறிய பின் கொஞ்சம் தேன் சேர்க்கவும். இதைப் பிறகு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிடலாம்.

செரிமானக் கோளாறுக்கு சில எளிய மருந்துகள்

செரிமானக் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க மேலும் சில கைமருந்துகளையும் உட்கொள்ளலாம்:

# வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 50 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்த லாம். மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.

# ஓமம், மிளகு தலா 35 கிராம் எடுத்து, நன்கு இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலை என இரண்டு வேளையும் 5 கிராம் சாப்பிட்டுவந்தால் பொருமல் நீங்கும்.

# ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை ஆகிய மூன்றையும் சமபங்கு எடுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து, அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு மோரில் கலந்து அருந்தினால் மந்தம் நீங்கும்.

# பசியைத் தூண்டியும் உண்ட உணவு எளிதில் செரிமானமாகவும், வயிறு தொடர்பான பிரச்சினைகள் தீரவும், ஓமத்தைக் கஷாயமாக்கி அருந்தி வருவது நல்லது. இதற்குத் தேவையான பொருட்கள்: ஓமம் – 200 கிராம், ஆடாதோடை வேர் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், புதினா – 100 கிராம், இவற்றின் மேம்பொடியாக இந்துப்பு – 15 கிராம். இவற்றைச் சேர்த்து ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் தலா 60 மி.லி. அருந்திவந்தால் அஜீரணம் குணமாகும்.

# ஒரு கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, அரைத் தேக்கரண்டி மிளகு, அதே அளவு சீரகம் இரண்டையும் நைத்துப் போட்டு, இத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு சிறிய சங்கு அளவு குடித்துவந்தால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.

Leave a Reply