நேபாளத்தில் இரண்டாவது நாளாக பயங்கர பூகம்பம் பலி எண்ணிக்கை 2500 ஆக உயர்வு

images

* இடிபாடுகளில் தோண்டத்தோண்ட பிணக்குவியல்
* இமயமலை பனிப்பாறைகள் சரிவில் பலர் சிக்கி தவிப்பு
* இந்திய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்

காத்மாண்டு : பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளமே உருக்குலைந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் அங்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இடிபாடுகளை தோண்ட தோண்ட எங்கும் பிணக்குவியல்கள் தான்; பலியானோரின் எண்ணிக்கை 2,500 தாண்டியுள்ளது. நேபாளத்தில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலும் நேற்று பல மாநிலங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பீதி நிலவுகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே மையம் கொண்டு நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டிடங்கள், கோயில்கள், வரலாற்று சின்னங்கள்  மண்ணோடு மண்ணாக புதைந்தன. 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தராஹரா கோபுரம் சரிந்து விழுந்தது. மேலும் கட்டிடங்களுடன் சேர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. நேபாளத்தை ஒட்டியுள்ள பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் பலியாயினர். உ.பி, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, நேபாளத்தில் நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு சாலையிலேயே தஞ்சமடைந்தனர். பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரில் இரவு முழுவதும் குழந்தைகளுடன் சாலையிலேயே தங்கியிருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீ்ட்கும் பணி மும்முரமாக நடந்தது. இந்தியா சார்பிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்புப் பணிகள்: நேற்று காலை மீட்பு பணிகள் விரைவாக நடந்தன. பல கட்டிடங்களில் இருந்து சடலங்கள் குவியல் குவியலாக மீட்கப்பட்டன. இதனால் நேபாளத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,500யை தாண்டியது. காத்மாண்டு போலீசார் கூறுகையில், ‘மொத்தம் 2,523 பேர் பலியாகி உள்ளனர். 6500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது’ என்றனர்.

மீண்டும் நிலநடுக்கம்: இதற்கிடையே, பகல் 12.39 மணி அளவில் நேபாளத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் கோதாரி பகுதியில் மையம் கொண்டு, சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் எஞ்சிய கட்டிடங்களும் அதிர்ந்ததால், மக்கள் பீதியில் உறைந்தனர். ஏற்கனவே முற்றிலும் சீர்குலைந்துள்ள காத்மாண்டு நகரில் மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு சாலையில் ஓடி வந்தனர். மீட்பு பணியும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நேபாள மக்கள் பீதியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அசாம், பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, அரியானா, பஞ்சாப்பில் மக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து 2வது நாளாக நில நடுக்கங்களும், அதிர்வுகளும் காரணமாக, நேபாளத்திலும், இந்தியாவின் வடமாநிலங்களிலும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

காத்மாண்டுவில், வீடுகளுக்குள் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்காக சாலையெங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேதமடையாத வீடுகள் இருந்தும் அனைத்து மக்களும் முகாம்களிலேயே தங்கி உள்ளனர். மேலும், நிலநடுக்கத்தை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 1000 பேரின் கதி என்ன என்பதும் தெரியவில்லை. இதுவரை 22 ேபரின் சடலங்கள் கிடைத்துள்ளன. 61 ேபர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை ேதடும் பணி நடந்து வருகிறது. நேபாளத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியை மத்திய அரசு விரைவு படுத்தி உள்ளது. விமானப்படை விமானங்களும், சிறப்பு விமானங்களும், பஸ்களும் தலைநகர் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்கள் நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

அதிர்வுகள் தொடரும்; கனமழை பெய்யும்

அடுத்தடுத்த நில அதிர்வுகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு துறையின் பொது இயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் கூறுகையில், ‘நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட லேசான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் உணரப்படுகிறது. இந்த நில அதிர்வுள் மேலும் தொடரலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக கனமழை பெய்து, நிலச்சரிவுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே நிலச்சரிவு ஏற்படும் பகுதியிலிருந்து பொதுமக்கள் பத்திரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். நேபாளத்தில் அடுத்த இரு தினங்களில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என கூறி உள்ளார்.

225 பேர் டெல்லி வந்தனர்

* நேற்று மாலை விமான சேவை தொடங்கியதைத் தொடர்ந்து காத்மாண்டுவிலிருந்து விமானப்படை விமானம் மூலம் 225 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 8 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக பாட்னா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* நேபாளத்தில் மீட்பு பணி மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் நேற்று 13 ராணுவ விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் மருந்துகள், போர்வைகள், 50 டன் குடிநீர் உள்ளிட்ட நிவாரண உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
* இந்தியா-நேபாள எல்லை வழியாக உ.பி மற்றும் பீகாரில் இருந்து 35 பஸ்களும் அனுப்பட உள்ளன. இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளத்திலிருந்து மீட்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply