வெளிநாட்டுப் படிப்பு, சுவாரஸ்யமும், அனுபவமும் உள்ளதாயும், செலவு கூடுதலாக ஒறாகவும் இருக்கிறது. அமெரிக்கா தவிர, பல நாடுகள், படிக்கும்போதே மாணவர்கள் வெளியில் பணிபுரிய அனுமதிக்கின்றன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரங்கள் வரை, வளாகத்திற்குள் பணிபுரிய, வெளிநாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதர நாடுகளிலும், இந்த அனுமதி வேலைநேரம் ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, கனடாவில், கல்லூரி நாட்களில் வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரங்கள் off campus பணி செய்யும் அனுமதியும், விடுமுறை நாட்களில் அதிகபட்சமா 40 மணிநேரங்கள் off campus பணி அனுமதியும் வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனிலும், மேற்கண்ட விதிமுறைகளில் பெரியளவு மாற்றங்கள் எதுவுமில்லை.
On campus அல்லது off campus பணி வாய்ப்புகளில், நீங்கள் உங்களின் தனிப்பட்ட செலவினங்களுக்கான, சில சமயங்களில் வாழ்க்கை செலவினங்களுக்கான பணத்தை சம்பாதிக்க முடியும். அதேசமயம், இத்தகைய வருமானத்திலிருந்து, உங்களின் முழு வெளிநாட்டு படிப்பிற்கான செலவினங்களையும் சமாளிப்பதென்பது ஒரு அபூர்வமான விஷயமே.
வளாகத்திற்குள் உள்ளே பணிபுரியும் வெளிநாட்டு மாணவர்கள், நூலகம், ஆய்வகம், டைனிங் ஹால் மற்றும் சேர்க்கை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறான இடங்களில் பணிபுரிகிறார்கள். வளாகத்திற்கு வெளியிலான பணி என்பது, ரெஸ்டாரண்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் அமையும்.
அமெரிக்காவில், இப்பணிக்கான ஒரு மணிநேர குறைந்தபட்ச சம்பளம் 8.25 அமெரிக்க டாலர்கள். வாரத்திற்கு 20 மணிநேரங்கள் என்ற கணக்கில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணிசெய்தால், ஒருவரால் மாதத்திற்கு சுமார் 660 அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும்.
முதுநிலை பட்டப்படிப்பிற்கான உதவி
வளாகத்திற்கு வெளியே அல்லது உள்ளே பணி செய்யும் மாணவர்கள், பல்கலைக்கழக தரப்பிலிருந்து நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவின் பெரும்பான்மையான பல்கலைகள் மற்றும் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சில பல்கலைகள் ஆகியவை மாணவர்களுக்கான முதுநிலை படிப்பு உதவித்தொகைகளை வழங்குகின்றன. இந்த வகை உதவித்தொகைகள், ஒரு மாணவரின் முழு கல்விக் கட்டணம் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியவை.
இத்தகைய உதவித்தொகையைப் பெறுபவர்கள், கற்பித்தல் உதவியாளர்களாகவும்(Teaching assistants), ஆராய்ச்சி உதவியாளர்களாகவும்(Research assistants) பணியாற்றலாம். பொதுவாக, இந்த உதவித்தொகை பெறுபவர், paper grading பணியில் பேராசிரியர்களுக்கு உதவுபவராகவும், சிறிய வகுப்புகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்.
பணி அனுபவமும், சிறப்பான தகுதி நிலைகளும் மற்றும் அபார திறனும் உடைய மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித்தொகையாக, ஒரு மாணவர், 1,200 அமெரிக்க டாலர்களை ஒரு மாதத்திற்கு பெற முடியும்.
தேவை அடிப்படையிலான நிதியுதவி
நீங்கள் முதுநிலை படிப்பு உதவித்தொகை அல்லது வளாகத்திற்கு உள்ளே அல்லது வளாகத்திற்கு வெளியேயான பணி வாய்ப்புகளை பெறாத சூழலில், மெரிட் அல்லது தேவை அடிப்படையிலான நிதியுதவிக்காக, பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம். சிறந்த கிரேடுகளை பெற்ற மாணவர்களுக்கு, பல பல்கலைகள் உதவித்தொகை வழங்குகின்றன.
அந்த வகையான உதவித்தொகைகளைப் பெறுவதற்கு போட்டி அதிகம் என்பது மட்டுமின்றி, அது தேவை அடிப்படையிலானதும் கூட. அந்த வகையான நிதியுதவியை நீங்கள் நேரடியாக, சம்பந்தப்பட்ட பல்கலையிடமிருந்தே பெறலாம். இதுபோன்ற உதவித்தொகைகள், பொதுவாக, கல்விக் கட்டணத்தில் 10% முதல் 75% வரையிலான தொகையை பூர்த்தி செய்வதாக உள்ளன.
கல்விக்கடன்
உங்களுக்கு, படிக்கச் செல்லும் நாட்டில் வேறு வாய்ப்புகள் இல்லையெனில், இந்தியாவில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பல ஸ்டேட் வங்கிகள், ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்குகின்றன. இத்தகைய கடன்களின் வட்டி விகிதம் 11.75%.
இவற்றை திருப்பி செலுத்தும் காலம், படிப்பை முடித்த 1 ஆண்டு கழித்தோ அல்லது வேலை கிடைத்து 6 மாதங்கள் கழித்தோ, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ, அப்போது தொடங்குகிறது. அதேசமயம், 12 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். அதேசமயம், இக்கடனைப் பெறுவதற்காக, கடன் தொகையில், 115% அளவுக்கு சொத்து உத்தரவாதம் தர வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள வங்கிகள், சர்வதேச மாணவர்களுக்கு, எந்தவித சொத்து உத்தரவாதமும் இல்லாமலேயே கடன் வழங்குகின்றன. ஆனால், இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட மாணவருக்கு guarantee தரும் ஒரு அமெரிக்க குடிமகன் அல்லது green card வைத்திருப்பவரின் credit history கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வகை கல்விக்கடனில், உள்நாட்டில் பெறும் கடனைவிட, நல்ல பலாபலன்கள் உண்டு. இத்தகைய கடனுக்கு 7% முதல் 9% வரையே வட்டி விதிக்கப்படுகிறது. மேலும், இக்கடனை மொத்தம் 25 ஆண்டுகள் கால அளவில் திருப்பி செலுத்தலாம்.
வெளிநாட்டில் படிக்கச் செல்லும் ஒரு மாணவர், தனக்கான கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களை எவ்வாறெல்லாம் சமாளிக்கலாம் என்பதை பற்றி, இக்கட்டுரையில் பல தகவல்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
எனவே, ஒரு வெளிநாட்டு பல்கலைக்கு விண்ணப்பிக்கும் முன்பாகவே, உங்களுக்கான ஏற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம், நாட்டை விட்டு வெளியேறும் முன்பாகவாவது தகுந்த ஏற்பாட்டை செய்து கொண்டு விடுங்கள். அப்போதுதான், உங்களின் வெளிநாட்டு கல்வி இனிய அனுபவமாக அமையும்.