முன்னாள் முதல்வரின் மகன் அதிரடி கைது. காரில் இருந்த ரூ.4.65 லட்சம் பறிமுதல்

முன்னாள் முதல்வரின் மகன் அதிரடி கைது. காரில் இருந்த ரூ.4.65 லட்சம் பறிமுதல்
bihar
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அவர்களின் மகன் பிரவீன்குமாரின் காரில் இருந்த ரூ.4.65 லட்சம் ரொக்கப்பணத்திற்கு அவர் கூறிய விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் கைது செய்யப்பட்டதாக பீகார் மாநிலத்தில் உள்ள மக்தம்பூர் போலீஸ் அதிகாரி முகம்மது அஷ்பக் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 12 முதல் ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளதால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கயாவிலிருந்து பாட்னாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் மகன் பிரவீன் குமாரின் வாகனத்தை ஜெகானாபாத் மாவட்டம் மக்தம்பூர் சோதனைச் சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் சோதனை நடத்தியதில் ரூ. 4.65 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

அந்தப் பணத்துக்கு முறையான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை, அவர் அளித்த பதிலும் திருப்திகரமாக இல்லை. எனவே போலீஸார் அவரை கைது செய்து மக்தம்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக போலீஸ் அதிகாரி முகம்மது அஷ்பக் அன்சாரி தெரிவித்தார்.

இதனிடையே, பாட்னாவின் ஹனுமன் நகரில் உள்ள தமது வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக தனது சகோதரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுச் சென்றுகொண்டிருந்ததாக செய்தியாளர்களிடம் பிரவீன்குமார் கூறியுள்ளார்.

பிகாரில் தேர்தல் நடத்தை நெறிகள் அமலுக்கு வந்துள்ளதால் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்லலாம். அதற்கு அதிகமான தொகையை கையில் எடுத்துச் சென்றால் உரிய காரணத்தை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply