கனடாவில் விமான விபத்து. முன்னாள் அமைச்சர் மனைவியுடன் பலி
கனடா நாட்டில் தனியார் விமானம் ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீன் லாப்பியர் என்பவர் தனது தந்தை இறந்த செய்தி கேட்டு அவரது இறுதிச்சடங்கிற்கு செல்லும் வழியில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஜீன் லாப்பியர், அவருடைய மனைவி மற்றும் இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பலியாகினர். இந்த விமானத்தை ஓட்டிய விமானியும் பலியானார்.
59 வயதான ஜீன் லாப்பியர் 2004-2006 ஆண்டுகளில் கனடாவின் பிரதமராக இருந்த பால் மார்ட்டின் அவர்களின் அமைச்சரவையில் அந்நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தார். கனடாவின் அமைச்சராக பதவியேற்கும் முன்னர் அவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்திற்கு மோசமான வானிலையே காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு அதை ஆராய்ந்து வருவதாக கனடா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.