சோலார்பேனல் மோசடி வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர். சரிதா நாயர் அதிரடி குற்றச்சாட்டு
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவையே அதிர வைத்த ஒரு வழக்கு சோலார் பேனல் வழக்கு. முன்னாள் முதல்வர் உம்மனாண்டி உள்பட பலர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் திமுக அமைச்சர் ஒருவருக்கும் இந்த மோசடியில் பங்கு உண்டு என்று நடிகையும் சோலார் பேனர் நிறுவனத்தின் இயக்குனருமான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று சரிதா நாயர் மற்றும் அவருடைய மேலாளர் ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்ற விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரிதா நாயர் கூறியதாவது:
கேரள அரசு சோலார் பேனல் மோசடி குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இந்த கமிஷன் முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இது அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று நம்புகிறேன். மேலும் சோலார் கமிஷன் கேரள அரசிடம் சில கருத்துகளை பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.
இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது ரிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆரியாடு முகமது, அனில்குமார், முன்னாள் நிதித்துறை இணை மந்திரி தி.மு.க.வை சேர்ந்த பழனிமாணிக்கம் ஆகியோரும் அடங்குவர்.
மலையாளத்தில் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து சுயசரிதம் எழுதியுள்ளேன். இதை தமிழ்மொழியில் வெளியிடும் பணி நடந்து வருகிறது. அசோக் என்பவர் இயக்கும் ‘கனலி’ என்ற தமிழ் படத்தில் வில்லியாக நடித்து வருகிறேன். மலையாளத்தில் பையாவேலி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன். இதுதவிர வேணா பூவு படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறேன்.