அப்துல்கலாம் உடலை கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும். அச்சுதான்ந்தன் கோரிக்கை
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நாளை அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள நிலையில் அப்துல்கலாம் உடலை கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும் என கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அப்துல்கலாம் கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். எனவே கேரள மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடலை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும்” கூறியுள்ளார்.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ” பீகாரில் உள்ள கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வேளாண் கல்லூரி என பெயர் மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிஹாரின் வளர்ச்சியில் குறிப்பாக பீகார் கிராமப் பகுதிகளின் முன்னேற்றத்தில் அப்துல் கலாம் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். அவருடைய இதயத்தில் பிஹாருக்கு நெங்கிய இடமுண்டு. அவர் மீது பிஹார் மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்” என்று கூறியுள்ளார். நேற்று டெல்லியில் அப்துல்கலாம் உடலுக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தலைவர்கள் மட்டுமின்று உலக தலைவர்களும் மறைந்த அணு விஞ்ஞானிக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “”இந்தியா-அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு கலாம் பெரும் பங்காற்றினார்” என்று புகழ்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”லட்சக்கணக்கான மக்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கும் கலாம் உந்து சக்தியாக இருந்துள்ளார்” என தெரிவித்துள்ளார். தெற்காசிய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் கலாம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியுள்ளார்.
சிறந்த நண்பரை இழந்துவிட்டதாக நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா குறிப்பிட்டுள்ளார். கலாமின் மறைவு அறிவியல் சமுதாயத்திற்கு பேரிழப்பு என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். இந்தியாவின் குறிப்பிடத் தக்க குடியரசுத் தலைவராக, அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம் என பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழ்ந்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங்கும் அப்துல் கலாம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.