மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை. நீதிபதியை கைது செய்ய வழக்கில் அதிரடி தீர்ப்பு.

 nasheedமாலத்தீவில் நீதிபதியைக் கைது செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (47). மாலத்தீவு ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கிறார். இவர் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு இவர் அதிபராக இருந்த போது, தலைமை நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி நீதிபதி கைது செய்யப்பட்டார். முகமது நஷீத் பதவி இழந்த பின்னர், அவர் மீது இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான வுடன், மாலத்தீவுத் தலைநகர் மாலே அருகில் உள்ள தூனிதூ சிறையில் நஷீத் அடைக்கப்பட்டார். அப்போது, நஷீத் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடந்த போது, நஷீத்தின் வழக்கறிஞர் திடீரென ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘விசாரணை ஒரு தலைபட்சமாக நடத்தப்படுகிறது. முகமது நஷீத்தின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் உள்நோக்கத்துடன் வழக்கு நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ‘‘அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ள இந்த சிறை தண்டனையை எதிர்த்து தெருக் களில் கடுமையாகப் போராட் டங்கள் நடத்துங்கள். உங்கள் வலிமையைக் காட்டுங்கள். சர்வாதிகார ஆட்சியைக் கண்டித்து துணிச்சலுடன் போராடுங்கள் ’’என்று நஷீத் தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2018-ம் ஆண்டு மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் நஷீத்தை போட்டியிட விடாமல் தடுக்கவே, அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் அப்துல்லா யாமின்தான் காரணம் என்று அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா தலமான மாலத்தீவை சர்வாதிகார ஆட்சி மூலம் யாமின் சீரழித்து வருகிறார் என்று கூறி கடந்த ஓராண்டாகவே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நஷீத்துக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் நஷீத்துக்கு சிறை தண்டனை வழங்கப் பட்டதற்கு அமெரிக்கா, இங்கி லாந்து உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறையும் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, மாலத்தீவு பயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply