பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷாரப் திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் அவர்களுக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததாகவும், இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் 72 வயது பர்வேஸ் முஷாரப். இவருடைய ஆட்சி காலத்தில் சிவப்பு பள்ளிவாசலில் 2007 இல் அரசுத் தரப்பு படைகளுக்கும் பள்ளிவாசல் ஆதரவாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதலில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முஷாரப் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முஷாரப் நேற்று அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். முஷாரப் உறவினர்கள் உடனடியாக அவரை கராச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கராச்சி மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக முஷாரப்பை பரிசோதனை செய்ததில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக முஷாரப் மயங்கி விழுந்திருக்கலாம் என்றும் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனது உடல்நிலையை காரணம் காட்டி பல்வேறு முறை முஷாரப் விசாரணையில் இருந்து தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today news: Former Pakistan PM Musharaff hospitalized