சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து உண்ணாவிரதம் தொடங்கிய முன்னாள் பிரதமர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழகத்தில் தண்ணீர் திறந்துவிடுமாறு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் பெங்களூரு விதானசெளதாவில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தனது கட்சித் தொண்டர்களுடன் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த உண்ணாவிரதத்திற்கு முதல்வர் சித்தராமையா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, ‘காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கர்நாடகத்தில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்பது சரியல்ல. தமிழகத்துக்கு 6 நாள்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடகத்துக்கு பேரிடியாக வந்துள்ளது. அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதல்ல. எந்தக் காரணத்தை முன்னிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தடுக்க வேண்டும். வாரியம் அமைப்பதற்கு 2007-ஆம் ஆண்டில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கிறோம்.
காவிரி நடுவர் மன்றத்தை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு அக்.18-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவசர கதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது சரியல்ல. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று கூறினார்.