கொலை வழக்கு குற்றவாளிகள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சகோதரர் கஜேந்திரா சிங்கை சேர்க்க சி.பி.ஐ.க்கு ஜால்காவ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் அரசின் போது 2007 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் அவர்களின் சகோதரர் கஜேந்திரா சிங் பாட்டீல் கடந்த 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட விஷ்ராம் பாட்டீல் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் கஜேந்திரா சிங் பாட்டில் பெயரையும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க சி.பி.ஐக்கு ஜால்காவ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஜேந்திரா சிங் பாட்டில்தான் இந்த கொலைக்கு திட்டம் தீட்டியவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட விஷ்ராம் பாட்டீல் அவர்களின் மனைவி ரஜினி பாட்டீல் அவர்களும் இந்த கொலைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணம் என்றும், இந்த கொலைக்கு பின்னணியில் ஒரு பெரிய வி.ஐ.பி இருக்கின்றார் என்று தான் சந்தேகம் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
ஒரு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கொலைக்குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.