ஜெயலலிதாவின் தங்கை என கூறி வந்த சைலஜா பெங்களூரில் திடீர் மரணம்.

 sailajaமுன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறந்த தங்கை என கூறிக்கொண்டு வந்த 58 வயது சைலஜா என்ற பெண் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பெங்களூருவில் மரணம் அடைந்தார்.

பெங்களூரு கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் சைலஜா. இவர் கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். க‌டந்த சில வருடங்களாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சகோதரி என்றும், வறுமையில் இருக்கும் தனக்கு அவர் உதவி செய்ய வேண்டும் என்றும் மீடியாக்களில் தோன்றி தனது வேண்டுகோளை தெரிவித்து வந்தார்.

மேலும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, அவரை சந்திக்கவும் சைலஜா முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சைலஜா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது என்றும் மைசூருவில் வசித்துவரும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் உள்பட பலர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை மைசூரு சாலையில் உள்ள மயானத்தில் சைலஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சைலஜாவின் மகள் அம்ருதா செய்தியாளர்களிடம் கூறியபோது, ”அம்மா உயிரோடு இருந்தவரை அவரது கடைசி ஆசை நிறைவேறவில்லை. அவரது மரண செய்தி ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. இனி என்ன இருக்கிறது?” என்று தெரிவித்தார்.

Leave a Reply