கங்கை நீர் வீட்டுக்குள் புகுந்தால் நல்லதுதானா. பீகார் வெள்ளத்தை கிண்டலடித்த லாலு பிரசாத்
கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து பீகார் மாநில மக்கள் அவஸ்தையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் கங்கை நீர் புகுந்தால் அதிர்ஷ்டம்தான் என பீகார் மாநில முன்னாள் முதல்வர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கங்கை நதியில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடும் காரணத்தால் பிகார் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. வெள்ள நிலைமையை சமாளிக்க உதவும்படி பிகார் மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிகார் வெள்ளம் குறித்து லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘கங்கை வீட்டுக்குள் புகுந்தால் அதிர்ஷ்டமானதுதானே. கங்கை நதி நம் வீட்டுக்கே நம்மைத் தேடி வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. எப்போதும் நாம் தான் கங்கையைத் தேடி செல்ல வேண்ளடும், இப்போது பிகாரில் வீட்டைத் தேடி கங்கை வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஒருபக்கம் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்து வரும்போது இன்னொரு புறம் அம்மாநிலத்தின் தலைவர் ஒருவர் அதை கிண்டலுடன் கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.