10 மணி நேர கடுமையான போராட்டம்: தாய்லாந்து குகையில் இருந்து 10 சிறுவர்கள் மீட்பு
மீட்புப்படையினர்களின் தீவிர முயற்சியால் 10 மணி நேரத்திற்கு பின்னர் தாய்லாந்து குகையில் சிக்கிய 4 சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் மீதியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி நீச்சலில் திறன் படைத்த கடற்படை வீரர்களை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரவும் திட்டமிடப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் குகையில் சிறுவர்கள் சிக்கி 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அதிரடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் களத்தில் இறங்கினர். சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கி நீண்ட நேரம் ஆழ்கடலில் இருந்து அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளே சென்றனர். இந்த அதிரடி ஆபரேஷனில் ஆபத்து இருந்தாலும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முயற்சியில் 10 மணி நேரத்திற்கு பின்னர் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் தரப்பட்டுள்ளதாகவும் மீதியுள்ள சிறுவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது