ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து நேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி ராஜஸ்தானுக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கும், கர்நாடகத்துக்கு குஜராத் சட்டப்பேரவைத் தலைவர் வஜுபாய் வாலாவும், மகாராஷ்டிரத்துக்கு மத்திய முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் ராவும், கோவாவுக்கு பாஜக மகளிர் அணி முன்னாள் தலைவர் மிருதுளா சின்ஹாவும் கவர்னர்களாக பதவியேற்க உள்ளனர்.
ராஜஸ்தான் மற்றும் கர்நாடக கவர்னர்களாக இருந்த மார்கரெட் ஆல்வா மற்றும் பரத்வாஜ் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிந்ததால் அந்த இரண்டு மாநிலங்களிலும் கவர்னர் பதவி காலியாக இருந்தது. இதேபோல் மகாராஷ்டிர ஆளுனர் சங்கர நாராயணன் மிசோராம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாம் செய்தார். கோவா கவர்னர் வாஞ்சூ அவர்களும் பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த இந்த நான்கு மாநிலங்களுக்கும் தற்போது கவர்னர்களை நியமனம் செய்திருப்பதாக ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர், ராம்நாயக் (உத்தரப் பிரதேசம்), கேசரிநாத் திரிபாதி (மேற்கு வங்கம்), ஓம் பிரகாஷ் கோலி (குஜராத்), பல்ராம்ஜி தாஸ் டாண்டன் (சத்தீஸ்கர்), பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா (நாகாலாந்து), கப்தான் சிங் சோலங்கி (ஹரியாணா) ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 4 புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.