4 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் அறிவிப்பு. தமிழகத்திற்கு யார்?
தமிழக ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதி நிறைவடையவுள்ளது. புதிய ஆளுனர் யார்? என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இன்று குடியரசு தலைவர் மணிப்பூர், பஞ்சாப், அசாம் மற்றும் அந்தமான் தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். புதிய ஆளுனர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. மணிப்பூர்: இந்த மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள 76 வயது நஜ்மா ஹெப்துல்லா, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கடந்த மாதம் விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற எழுதப்படாத விதியை பிரதமர் மோடி பின்பற்றுவதாக கூறப்படும் நிலையில் நஜ்மாவுக்கு இந்த பதவி தேடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாப்: இம்மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.சிங் பத்னோர், ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.
அசாம்: இந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், முன்னாள் மக்களவை உறுப்பினர். இவர் நாக்பூரில் இருந்து மக்களவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் நாக்பூரில் இருந்து வெளியாகும் ஹிடாவதா என்ற நாளேட்டின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.
அந்தமான் தீவுகள் யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜகதீஷ் முகி, டெல்லி முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட புதிய ஆளுநர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.