பெரியபுராண சொற்பொழிவு செய்யும் 4ஆம் வகுப்பு மாணவிகள்.

11ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் பெரியபுராணக் கதையை அப்பா சொல்லிக் கொடுத்தாங்க. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளையும் உள்வாங்கி, அதைச் சொற்பொழிவா பண்றது சவால்தான்! சொற்பொழிவு நல்லா இருந்துச்சுங்களா?” என்று பெரியமனுஷி மாதிரி கேட்கிறார் சிறுமி குங்குமப் பிரியா.

”அப்பா, எங்களுக்கு குருவும்கூட! தினமும் ராத்திரி புராணக் கதைகள் சொல்லித்தான் எங்களை தூங்கப் பண்ணுவார். அந்தக் கதைகள் கொடுத்த பிரமிப்புதான், அதன் மேல ஈர்ப்பும் பிடிப்பும் அதிகமாகி, இப்போ நாங்க இப்படி சொற்பொழிவு பண்றதுக்கே காரணம்!” என்று குங்குமப்ரியா சொல்ல, அவரின் சகோதரி மங்களப் பிரியா தொடர்ந்தார்…

”அப்பா கதை சொல்லும்போது நிறைய குறுக்குக் கேள்விகள் கேட்போம். எங்களுக்கு பதில் சொல்றதுக்காகவே அப்பா புராணக் கதைகளை இன்னும் இன்னும் தேடிப் படிக்க ஆரம்பிச்சார்னா பார்த்துக்கங்களேன். அம்மாவுக்கும் புராண, இதிகாசம்லாம் அத்துப்படி! அதனால சில நேரங்கள்ல அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எங்களுக்குக் கதை சொல்லுவாங்க, இப்ப நாங்க சேர்ந்து சொல்ற மாதிரியே!” என்று சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார் மங்களப் பிரியா.

திருச்சி அருகே உள்ள பெரம்பலூர்தான் இவர்களின் சொந்த ஊர். இவர்களின் தந்தை ஆனந்தநடேசன்,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். தாயார் சாவித்திரி, ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

குங்குமப் பிரியா, மங்களப் பிரியா இருவரும் பெரம்பலூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்களின் திறமையைக் கண்டு வியந்த பள்ளி நிர்வாகம், இவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளியில் இறை வணக்கம் பாடும்போது, சிறு சொற்பொழிவாற்றவும் இவர் களுக்கு நேரம் ஒதுக்கியுள்ளது. சொற்பொழிவுடன் கர்னாடக சங்கீதமும்  பயின்று வருகிறார்கள் இந்தச் சகோதரிகள். படிப்பு ஒரு பக்கம், சொற்பொழிவு ஒரு பக்கம், இசைப் பயிற்சி ஒரு பக்கம் என காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக, துறுதுறுவெனத் திகழ்கிறார்கள்.

”என் மகள்கள் ரெண்டு பேரையும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி கொடுத்த வரமாத்தான் நான் நினைக்கிறேன். அதனால இவர்களைக் கடவுள் பணியில் ஈடுபடுத்தினா நல்லாருக்குமேனு தோணுச்சு. எனக்கு நல்லா தெரிஞ்ச பெரியபுராணக் கதையை அவங்களுக்குச் சொல்ல ஆரம்பிச்சேன்” என்கிறார் ஆனந்த நடேசன்.

”பெரிய புராணத்துக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த தலம், சிதம்பரம். அந்தக் கோயில்லயே இந்தக் குழந்தைகளோட பெரியபுராண இசைச் சொற்பொழிவு அரங்கேற்றம் நடந்தது மிகப் பெரிய கொடுப்பினை!” என்று நெகிழ்ந்து சொல்கிறார் சாவித்திரி.

”இவர்களின் சொற்பொழிவு முயற்சி வெறும் பொழுதுபோக்கு  மட்டுமல்ல; ஆரோக்கியமான சமுதாயத்தை ஆன்மிகம் மூலம் உருவாக்கும் பயிற்சியும்கூட!” என்கிறார் ஆனந்த நடேசன்.

நல்ல முயற்சி! நல்ல பயிற்சி!

Leave a Reply