1000க்கும் மேலான வீடுகள் மூழ்கியது. பிரான்ஸ்-ஜெர்மனி நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம்
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருவதால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய கனமழை இந்நாடுகளில் பெய்ததில்லை. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கியா நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக 1000க்கும் மேற்பட்ட வீடுகள் முழ்கிவிட்டதாகவும் இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரான்ஸில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மானுவேல் வால்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
பிரான்ஸ் நாட்டை போலவே ஜெர்மனியின் கிழக்குப் பகுதியிலும் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேபோல ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பிராந்தியத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. மீட்பு படையினர் இரவுபகலாக செயல்பட்டு வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்டு வருகின்றனர்.
Chennai Today News: France and Germany continue to be devastated by floods