கமல்ஹாசனுக்கு செவாலியே விருது. குவியும் வாழ்த்துக்கள்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நேற்று பிரான்ஸ் அரசு செவாலியே விருதை அறிவித்துள்ளது. இந்த விருது கலை இலக்கிய துறையில் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கமல்ஹாசனுக்கு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1995ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் 21 வருடங்கள் கழித்து இந்த விருது மீண்டும் ஒருமுறை ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் வாட்ஸ் மூலம் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பிரெஞ்ச் அரசு கலை இலக்கியத்திற்காக செவாலியே விருது எனக்கு அளிக்க முன்வந்ததை பெருமிதத்துடன் பணிவுடன் ஏற்கிறேன்.இவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அய்யா சிவாஜி கணேசன் அவர்களையும் வடநாட்டு பாமரரையும் அறியச்செய்த சத்யஜித்ரே அவர்களையும் கரங்கூப்பி வணங்குகிறேன். இந்த செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவின் பிரான்ஸ் தூதர் அவர்களுக்கும் எனது நன்றி
இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது? என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக்கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரைமோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவேச மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.
இதுவரையான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெருங்கூட்டத்துடன் நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். என்னைப் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறுவெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது.
நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்!