தமிழகத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படுவதை போல ஜப்பான் நாட்டில் வயதானவர்களுக்கு ஐபேடு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஐபேடுகளின் மூலம் வயதானவர்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை முறை, எந்தெந்த நோய்களுக்கு என்ன மருத்துவம், மற்றும் ஓய்வு நேரங்களை உபயோகமாக கழிப்பது எப்படி போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஜப்பான் போஸ்ட் என்ற அஞ்சல் நிறுவனம், ஆப்பிள் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக 1000 வயதானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக ஐபேடுகளை வழங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உதவியால் வரும் 2020ஆம் ஆண்டிற்குள் ஐந்து மில்லியன் ஐபேடுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகையில் 25% பேர் அறுபது வயதிற்கும் மேல் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு உதவுவதில் பெருமைப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய முதியவர்கள் இளைஞர்களை போல கையில் ஆப்பிள் ஐபேடுகளை வைத்து கொண்டு இண்டர்நெட்டில் பிசியாக இயங்கிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை தற்போது பல இடங்களில் பார்க்க முடிவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.