‘நோய் நொடிகள் நிரம்பி வழியும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, நோயற்ற வாழ்வு வாழ சாத்தியம் இருக்கிறதா?
நமக்கு வருகிற நோய்கள் எதுவும் தானாக வருவதில்லை, அதை நாம்தான் விலைகொடுத்து வாங்கி வருகிறோம் என்பதாவது தெரியுமா?
உண்ணும் உணவு இருக்கிறதே… அதைவிட உயரிய மருந்து வேறு எதுவுமே கிடையாது. இதில் நம் பங்கு என்ன?”
– இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எழுப்பும் கால்நடை மருத்துவர் காசிபிச்சை… ஒவ்வொன்றுக்கும் சொல்லும் தீர்வுகள், அத்தனை பேரின் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்து என்பதோடு, நம்முடைய பாக்கெட்டுக்கும் வேட்டு வைக்காத மருத்துவ தத்துவங்கள்!
காசிபிச்சை… கிராமத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக கால்நடை மருத்துவம் படித்து, 30 ஆண்டு காலம் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாருடன் சேர்ந்து ‘தமிழின வாழ்வியல் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராக இயற்கை வாழ்வியல் மற்றும் நோயற்ற வாழ்வை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வரும் மனிதர்.
”அரியலூர் மாவட்டம், அரியூர் கிராமம்தான் நான் பிறந்து, வளர்ந்த ஊர். எங்கள் குடும்பத்தில் தாத்தா, அப்பா உள்ளிட்ட பலரும் நாட்டு மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதால், எனக்குள்ளும் மருத்துவம் குறித்த எண்ணங்கள் தானாகவே வந்துவிட்டன. சென்னை, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்த எனக்கு, தஞ்சாவூரில் அரசு பணி வாய்ப்புக் கிடைத்தது. மொத்தம் 30 ஆண்டுகாலம் பணிபுரிந்த நான், 18 இடமாறுதல்களைக் கடந்தேன். இதுவே எனக்கு வாழ்வியல் உண்மைகள் பலவற்றைக் கற்றுக் கொடுத்தது” என்று சொல்லும் காசிபிச்சை, தான் படிக்கும் காலத்தில், ஆறாத புண்ணோடு இருந்த மாடு ஒன்றுக்கு பலரும் பல சிகிச்சைகளை அளித்தும் குணமாகவில்லையாம். தன் பேராசிரியர் கணபதியிடம், தனக்குத் தெரிந்த நாட்டு மருத்துவத்தை இவர் சொல்ல, அதை அவரும் அப்படியே செய்ய, மாட்டுக்கு புண் குணமாகி, பலரின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.
”மாடுகளோ… மனிதர்களோ… இப்படி இயற்கையோடு சேர்ந்த மருத்துவத்தை மேற்கொள்வதில் எனக்கு எப்போதுமே அலாதி ஆர்வம். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்… நிறைய புத்தகங்கள் படித்து, சித்த மருத்து வர்களை நேரில் சந்தித்து இயற்கை மருத்துவ முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். அதனால்தான், நம்மாழ்வாரு டன் சேர்ந்து இலவச மற்றும் எளிமையான செலவுகளில் இயற்கை மருந்து களைக் கொண்டு நோய் நொடிகளை குணப்படுத்த வும், நோய்கள் அண்டாமல் எச்சரிக்கையாக இருப்பது பற்றியும் ஆலோசனைகளை ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து அளிக்க ஆரம்பித்தோம். இதை, நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகும் தொடர்கிறோம்.
மக்களுக்கு பயனுள்ள மருந்துகளைப் பரிந்துரைத்து வருகிறோம். உதாரணத்துக்கு… ‘சொரியாஸிஸ் நோய்க்கான மருந்து’ என்ற பெயரில் பலரும் அதிக விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மருந்தை நான் இலவசமாகவே தந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும் காசிபிச்சை, இதுவரை 20 புத்தகங்களை எழுதியுள்ளார். ‘பசுமை விகடன்’ உள்ளிட்ட பத்திரி கைகள் வழியாகவும், திருச்சி ‘ஆல் இந்தியா ரேடி யோ’ உள்ளிட்ட ரேடியோ வாயிலாகவும் பல்வேறு இயற்கை மருத்துவம் சார்ந்த கருத்துகளையும், ஆலோ சனைகளையும் ஆர்வமாக வழங்கி வருகிறார்.
நோய்களைப் பார்த்து கலங்கித் தவிக்கிறீர்களா… 044 – 66802932 இந்த எண் ணுக்கு பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை டயல் செய்யுங்கள்… கலக்கத்தை விட்டொழியுங்கள்!