கனிமொழியில் தத்து கிராமங்களுக்கு இலவச வை-பை. BSNL ஏற்பாடு

கனிமொழியில் தத்து கிராமங்களுக்கு இலவச வை-பை. BSNL ஏற்பாடு
kanimozhi
பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அனைத்து எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் பின் தங்கிய கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கையை ஆளுங்கட்சி, மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொருவரும் ஒருசில கிராமங்களை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி.யும், திமுக தலைவர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்தார். அதேபோல் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார். இந்த இரு கிராமங்களிலும், கனிமொழி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தேசியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவத்சவாவுக்கு, கனிமொழி எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் ஆகிய கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இணைய வை-பை வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்த இரு கிராமங்களிலும் வை-பை கட்டமைப்பு ஏற்படுத்தும் செலவுத்தொகையை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கனிமொழி தத்தெடுத்த மேற்குறிப்பிட்ட இரு கிராமப் பகுதிகளிலும் விரைவில் இலவச வை-பை வசதி வர இருக்கிறது. இந்த தகவலை கனிமொழி இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply