ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம் செய்யும் ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் அவ வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகம் வருகை தந்து ஜெயலலிதாவை சந்தித்து பேசினார் என்பதும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது அவர் அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் பாணியில் இலவச அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் விமான நிலையங்கள், பொது இடங்கள், ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை மக்கள் பெற முடியும் என தனது டுவிட்டரில் ஹிலாரி க்ளின்டன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் அனைத்து வீடுகளுக்கு பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி சென்றடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹிலாரி க்ளின்டன் இளைஞர்களை கவரும் விதமான அறிவிப்புகளையும், மிகுந்த தொழில்நுட்பம் தொடர்பான அறிவிப்புகளை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், அதன் மேம்பாட்டுக்காகவும் புதுமையான விஷயங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசின் சேவைகளை மக்கள் பயன்படுத்துவதில் டிஜிட்டலின் முக்கியத்துவத்தையும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு எளிமையாக உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரி கிளிண்டன் தான் அடுத்த அதிபர் என்று கூறி வருகின்றன. டொனால்ட் டிரம்ப் கடுமையான போட்டியை கொடுத்து வந்தபோதிலும் கருத்துக்கணிப்புகளில் அவர் பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.