பாலியல் வன்கொடுமை புகாரில் பால கங்காதர திலகர் பேரன் கைது!
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களில் மிகவும் முக்கியமானவர் பாலகங்காதர திலகர். வ.உ.சிதம்பரனார் உள்பட பல தலைவர்களுக்கு குருவாக இருந்தவர். இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த அந்த தியாகியின் பேரன் இன்று பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அவரது புகழுக்கு ஏற்பட்ட இழுக்காக பார்க்கப்படுகிறது.
புனேவில் வாழ்ந்து வரும் ரோகித் திலக், மஹாராஷ்ட்ரா காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன். இவர் தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
ரோஹித் திலக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புனே போலீசில் 40 வயது பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரோஹித் மீது பாலியல் குற்றச்சாட்டு, மிரட்டல் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை புனே காவல்துறை இன்று காலை கைதுசெய்துள்ளது. இந்த வழக்கு குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.